'மந்திரங்களுக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. இறைவனை மனதில் நிறுத்திச் சொல்லும்போது, அந்த மந்திரச் சொற்களுக்குள் நாம் அமிழ்ந்து போவோம். அப்படி ஒருமித்த நிலையில் இருக்கிறபோது, அந்த மந்திர பலமானது நம் புத்தியிலும் தேகத்திலும் வியாபித்து, தேவதைகளின் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்று, நினைத்த காரியத்தை அடைந்து ஆனந்த வாழ்வு வாழலாம்!'' என்கிறார் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.
''வாழ்க்கைக்குத் தேவையான பத்து ஸ்லோகங்களை, தருவதில் எல்லையில்லா மகிழ்ச்சி எனக்கு! இந்த பத்து ஸ்லோகங்களை எவர் சொல்கிறாரோ, அவர்கள் வீட்டில் நிம்மதி குடியிருக்கும்; அவர்களின் குழந்தைகள் சகல கலைகளும் கற்றுத் தேர்ந்து ஞானவான்களாக ஜொலிப்பார்கள். ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் சிறப்புற வாழ்வார்கள்'' என்கிறார் நடராஜ சாஸ்திரிகள்.
செயலில் பக்கபலம்!
காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் றெக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!
ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்
நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!
கல்வியே கடவுள்!
கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒருவீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.
எனவே, கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர் களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!
ஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!
இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் பெற்று, புத்திமானாக வாழ்வில் உயர்வீர்கள்.
தேர்வில் வெற்றி நிச்சயம்!
தேர்வு பயம் என்பது யாருக்குத்தான் இல்லை? நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, தேர்வு நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படபடப்பு தேவையற்றது. பாடத்தை உருவேற்றி, மனதுக்குள் மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளப் பழகுங்கள். குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இதை தினமும் கூட சொல்லலாம்.
பாஷ்யாதி ஸர்வஸாஸ்த்ரானி ஏசான்யே நியமாஹா: ததா
அட்சரானயச ஸர்வானி துவந்து தேவி நமோஸ்துதே.
இந்த ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்ல, படிப்பின் மீதும், படித்து மனனம் செய்த விஷயங்கள் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை பிறக்கும். பீரோ லாக்கரில் இருந்து சாவி போட்டு எடுக்கிற பொருள் போல, படித்து உள்வாங்கிய விஷயங்களை, சட்டென்று எடுத்து தேர்வுத்தாளில் இறக்குவதற்கான சாவிதான் இந்த ஸ்லோகம்! ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்; தேர்வில் வெற்றி நிச்சயம்!
இசையும் வசமாகும்!
இசையின் மீது விருப்பம் கொள்ளாதவர்கள் எவருமே இல்லை. நம்மில் பலருக்கு இசையை ரசித்துக் கேட்கப் பிடிக்கும். ஒரு சிலருக்கு, அந்த இசையைக் கற்றறிய வேண்டும்; அதில் விற்பன்னராக வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். இசை என்பது மிகப்பெரிய கலை. ஓவியம் போல, எழுத்து போல, இசை என்பதும் கடவுள் வழங்குகிற வரப்பிரசாதம்!
இசை என்பது இசைப்பவர் களுக்கும் அந்த இசையைக் கேட் பவர்களுக்கும் துன்பம் போக்கும் மாமருந்து. ஏனெனில், இசைக்கு மயங்குபவர்கள் மனிதர்கள் மட்டும் அல்ல. இசையைக் கேட்டால், அந்தக் கடவுளே இசைந்து வருவான் என்பார்கள்.
இசைஞானம் பெற... இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இசையில் வல்லுநர் ஆவீர்கள்!
ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத
வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.
என்றும் நலமுடன் வாழ..!
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. பொதுவாக இந்தப் பழமொழியை, தேக ஆரோக்கியத்துக்குத்தான் அதிக அளவில் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள், மக்கள்.
ஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:
இழந்ததைப் பெறலாம்!
இழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை! இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது.
இந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.
அந்த ஸ்லோகம் இதுதான்!
ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரம்
அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,
லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம:
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே
கல்யாண வரம் கைகூடும்!
வாழ்க்கையை தி.மு. என்றும் தி.பி. என்றும் பிரித்துப் பார்க்கிறவர்கள் நாம். அதாவது திருமணத்துக்கு முன்; திருமணத்துக்குப் பின்! திருமணம் என்பது ஆணுக்குப் பெண் துணை என்றும், பெண்ணுக்கு ஆண் பாதுகாப்பு என்றும் கட்டமைப்பு கொண்டதாக அமைந்துள்ளது.
அதேபோல், திருமணம் என்பது வாழையடி வாழையாக சந்ததி வளர்க்கும் விஷயமாகவும் சாஸ்திரங் கள் தெரிவிக்கின்றன. இங்கே... 'நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாண வரன் தகையலையே...', 'கை நிறைய சம்பளம் வாங்கி என்ன புண்ணியம். என் புள்ளைக்கு கல்யாண ராசி இன்னும் வரலை' என்று வருத்தப்படுகிற பெற்றோர்கள் நம் உலகில் உண்டு. ஒரு பெற்றோரின் மிகப்பெரிய கவலையும் துக்கமும் தங்கள் வாரிசுக்குத் திருமணம் நடக்கவில்லையே என்பதாகத்தான் இருக்கும்.
ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது!
காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:
காம விஹாராய காம ரூபதராய ச
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:
பாலாரிஷ்ட நோய் நீங்கும்!
உலகின் மிகப்பெரிய செல்வம், பிள்ளைகள்தான்! குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லாது போகும் என்பார்கள். 'எவ்வளவு சொத்துகள் இருந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை' என்பதே பலரின் ஏக்கம்.
அதைவிட, அந்தக் குழந்தைக்கு சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்தாலோ, சரிவரத் தூங்காமல் எப்போதும் எதற்காகவோ அழுதுகொண்டே இருந்தாலோ... அதைவிட பெரிய வலியும் வேதனையும் வேறில்லை.
இதனை பாலாரிஷ்ட நோய் என்பார்கள். இதில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக வளரவும் இந்த ஸ்லோகம் உதவும்.
பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:
சக்தியை வணங்குவோம்!
அடுத்ததாக... தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று, இனிதே வாழலாம்!
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதி கே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
புஷ்பாஞ்சலி
எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ... அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும் செய்கிற பூஜைகளுக்கும், ஒவ்வொரு பலன் உண்டு.
அந்தப் பூக்களைக் கொண்டு ஸ்வாமிக்கு பூஜை செய்கிற போது மறக்காமல் நிறைவில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். மலர்களைப் போல, நம் வாழ்க்கையும் மலரும்!
அந்த புஷ்பாஞ்சலி ஸ்லோகம் இதுதான்!
யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
பிரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமாவா
அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி
Thanks for the useful information. But if you can post the Audio Version, it will be much useful, so we can get the correct pronunciation.
ReplyDelete