Thursday, March 4, 2010

தை பூசம்

தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் பௌர்ணமியில் வரும் திருநாள். நாளை (30-ஜனவரி-2010-சனிக்கிழமை) தைப்பூசத் திருநாள். (இங்கு இருப்பவை இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

சிவபெருமான் அன்னை உமாதேவியாருடன் கூடி ஞானசபையில் ஆனந்த நடனம் ஆடியதும் தைப்பூசத்திருநாளில்தான். தில்லை மூவாயிரவர்க்கும், ஹிரணியவர்மனிற்கும் நடராஜர் தரிசனம் தந்து அருள்பாலித்ததும் தைப்பூசத்திருநாளில்தான்.

சிதம்பரம் சித்ஸபையில் நடராஜர் நடனமாடிய நாள். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச்சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். புராண விளக்கம் : ஒரு சமயம், மஹா விஷ்ணு யோக நித்திரையிலிருந்து பரவசத்துடன் எழ, அவரைத் தாங்கிய ஆதிசேஷன், திடீர் மகிழ்விற்கான காரணம் கேட்க, விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தக் கூத்தினை அனுபூதியாக விளக்க, தானும் அக்காட்சியைக் கண்டுணர வேண்டும் என வரம் கேட்க, விஷ்ணு அருள்பாலிக்க, ஆதிசேஷன், அத்ரி ரிஷியின் பத்னியாகிய அனுசூயயின் குவிந்த கைகளில் (அஞ்சலி -குவிந்த கரம்) நாகமாக வந்து, பாதங்களில் விழுந்ததால் பதஞ்சலி என பெயர் பெற்று, தில்லை ஸ்ரீ மூலநாதரை, மத்யந்தின மகரிஷியின் மகனாகிய ஸ்ரீ வியாக்ரபாதர் என்ற புலிக்கால் உடைய முனிவருடன் வழிபாடாற்றி வந்தார்.

தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது. தை மாதம் - மகிழ்ச்சி பொங்கும் மாதம். சூரியன் தனது அயனத்தை (பாதையை) மாற்றும் மாதம். யோக குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு உரிய நக்ஷத்திரம் பூசம். ஆடுவதும் (dynamic) அவரே, அமைதியும் அவரே (static) என்றுணர்த்தவே, ஆட்டமாடி ஆட்டுவிக்க, ஆடாமல் ஆட்டுவிக்கும் யோக தக்ஷிணாமூர்த்திக்குரிய நாள், நக்ஷத்திரம், பகல் நேரம் என உத்தமமான வேளை வந்தது.

தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.

அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.
காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய திருவெண்நீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.

இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவகன்னியராட, நடமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.

ஆனந்த நடனமாடிய அம்பலவாணர், தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில், நடராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடனருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.

ஓம் க்ருபாசமுத்ரம் சுமுகம்த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதிவாமபாகம்
சதாசிவம்ருத்ரம் ஆனந்தரூபம் சிதம்பரேசம் ஹ்ருதிபாவயாமி

எங்குந்திருமேனி எங்குஞ்சிவசக்தி
எங்குஞ்சிதம்பரம் எங்கும் திருநடனம்
எங்கும் சிவமாயிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ்சிவனருட் டன்விளையாட்டதே. - திருமந்திரம்

தேவர்களின் விருப்பத்திற்கிணங்கி நடராஜர்(சிவன்)தன் சக்தியுடன் திருநடனக்காட்சியை காட்டிய நாள். எனவே சிவாலயங்களில், குறிப்பாக சிதம்பரத்தில் விழாக்கோலம் பூண்டு, தை மாதப் பூசநட்சத்திரத்தில் வரும் உற்சவம் மிக முக்கியமாய்க் கருதப்படுகிறது. சிவனார் ஆனந்தத் தாண்டவத்தைச் சித்சபையில் தைபூசத்தில் நடத்தியதாய்ச் கருதப்படுகிறது. இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்கும் இறைவன் தன் நாட்டியத்தைக் காட்டி முக்தி கொடுத்ததாய்க் கூறப்படுகிறது. பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் பெருந்தவம் செய்து வேண்டியதற்கிணங்க, சிதம்பரத்தில் தை மாதம், பூச நட்சத்திரம், பௌர்ணமி, கூடிய நன்நேரத்தில் ஸ்ரீநடராஜப்பெருமான் ஆனந்த நடனம் கொண்டருளினார். முதன் முதல் தில்லையம்பதியில் "கனகசபை" அமைத்து இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் தைப்பூச நன்னாளில் தான் என்று கருதப்படுகிறது. திருச்சபையில் ஆடிய ஈசன் என்பதால் "சபேசன்" என்ற பெயரும் விளங்குகிறது.

சிதம்பர க்ஷேத்திரம் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் இம்மூன்றினாலும் சிறப்புற்ற ஸ்தலம். சிவகங்கை தீர்த்தம். சிதம்பர க்ஷேத்ரத்தின் தச (10) தீர்த்தங்களுள் முக்கியமானது. சிதம்பரத்தில் சிவகங்கை குளத்திலே, தீர்த்தவாரிக்கு பிறகு, இறைவன் உலாவரும் நிகழ்வு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இக்குளத்தின் வருண (மேற்கு) திசை வாயிலில், ஸ்வாமி தீர்த்தம் கொடுப்பதே தைப் பூச தினந்தின் மிக முக்கிய நிகழ்வு. பஞ்சமூர்த்தி வீதியுலா வந்து, பகல் நேரத்தில், சிவகங்கைக் குளத்தின் மேற்கு வாசலில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி அருகிருக்க, ஸ்வாமி தீர்த்தவாரி (அனைவருக்கும் அருளுதல்) நடைபெறும். மதிய வேளையில் கனகசபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி, ஸ்ரீ நடராஜருக்கு நிவேதனம் செய்து, அனைவருக்குமான அன்னதான நிகழ்ச்சி நடைபெறும். எதிரிலிச் சோழன் குலோத்துங்கன் சிவபாதசேகரன் எனும் சோழ மன்னம் தைப்பூச அன்னப்பாவாடையை நிகழ்த்தினான் என்று பழங்கால செப்பேடு தெரிவிக்கின்றது.

சிதம்பரம், ஆலய நகர் என்றும் நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர், சிதம்பரம். திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. நடனமாடும் நிலை இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர். நடராசரின் நாட்டியம், ஆனந்த தாண்டவம் என்று ஆனந்தக் கூத்து என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர். நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டு கனகசபை என்ற பெயர் பெற்றது. பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாச வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.

தோற்ற விளக்கம் (நன்றி விக்கிபீடியா)

ஊன்றியிருக்கும் கால், குப்புற விழுந்து கிடக்கும் முயலகன் என்ற அசுரனின் முதுகின்மீது ஊன்றப்பட்டுள்ளது. இடது கால் உடம்புக்குக் குறுக்காகத் தூக்கப் பட்ட நிலையில் உள்ளது. நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க் கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயஹஸ்தம்) உள்ளது. இடது கீழ்க் கை தும்பிக்கை நிலை (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில், விரல்கள், தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது.

மயிலிறகுபோல் வடிவமைக்கப்பட்ட தலை அணி ஒன்றும், பாம்பும் இத் தோற்றத்தின் தலையில் சூடப்பட்டுள்ளது. இவற்றுடன், கங்கையும், பிறையும் சடையில் காணப்படுகின்றன. முடிக்கப்படாத சடையின் பகுதிகள் தலைக்கு இருபுறமும், கிடைநிலையில் பறந்தபடி உள்ளன. இடையில் அணிந்துள்ள ஆடையின் பகுதிகளும் காற்றில் பறக்கும் நிலையில் காணப்படுகின்றன.

நடராசர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும் பழங்கதைகள் ஊடாகவும், தத்துவங்களாகவும் சைவ நூல்களிலே காணக்கிடைக்கின்றன.

சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முக்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.

ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.

பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!

அவற்றில், சேஷநாகம் - கால சுயற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன.

பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான '' வைக் குறிக்கிறது இந்தக் கரம்.

ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, '' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.

வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.

தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.

முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.

பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.

அடுத்தாக, ஆடல் வல்லானின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அபயமுத்திரையாக அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான '' வை காட்டுகிறது.

நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம் - சாதாரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!

பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!

சிவனுக்கே உரிய "சூல விரதம்" அன்று சிறப்பித்துச் சொல்லப் பட்டாலும், அது தற்சமயம் அவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவாம்சமான சுப்ரமணியருக்கு உரிய நாளாகவும் கொண்டாடப் படுகிறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWBkOfBFDXdg4n-ox6LV7k2xyBstPrxxpBTiEhj5No78c5oC4gokezIICIOhaBT6ThsXCy4kKO-inzdG6zpwSUHDH4eatS00MUwy3n3VHbcq80ivjs1X8pZpg5AsToQuJI5DBz64GZpmAd/s400/palaniaandavar.jpg


அறுபடை விடுகளில் பழனியிலேதான் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக (பாதயாத்திரை) அவர் சன்னதியில் காணிக்கைகளை அவருக்குச் செலுத்தி பூஜிப்பது தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும். முருகனுக்கு கடியுண் கடவுள் என்றும் ஒரு பெயர் உள்ளது. புதியதை உண்பவர் என்று இதற்கு பொருளாகும். வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதிற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும் பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும். (இவற்றை பலியிடுவதற்கு அல்ல, அர்ப்பணிப்பதற்கு மட்டும், அதாவது நேர்ந்து கோவிலில் விடுதல் என்பர்.) முருகனின் அறுபடை வீடுகளில் பழனியிற்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்டு செல்வது வழக்கமாகிவிட்டது.

முருகன் என்றாலே கையில் வேல் கொண்டு மயில் மீது வலம் வரும் இறைவன் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால், அழகு எங்கெல்லாம் குடிகொண்டிருக்கிறதோ, அங்கெல்லாம் முருகன் இருப்பான் என்பது பழந்தமிழ் கொள்கையாகும். மலை, காடு, கடல், சோலை என்று இயற்கை அருளாட்சி செய்யும் இடங்களில் எல்லாம் முருகனின் அருள்மணத்தைக் காணலாம். எனவேதான், காடும், சோலைகளும் நிறைந்த மலைப் பகுதிகளில் முருகனின் கோயில் களை அமைத்தனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக, நக்கீரர் தான் இயற்றிய திருமுருகாற்றுப்படையில், கடலில் தோன்றும் இளஞ்சூரியனை, தோகை மயிலில் பவனி வரும் முருகனாக பாடுகிறார். இயற்கையே முருகன். முருகனே இயற்கை. இயற்கையை மதித்து வாழ்வதும் முருக வழிபாடே ஆகும்.

வள்ளி கல்யாணசுந்தரர்: சென்னை கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள சிறுவாபுரியில் வீற்றிருக்கும் முருகனைப் பற்றி திருப்புகழில் அருணகிரிநாதர், நான்கு பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். இக்கோயிலில் வள்ளி கல்யாணசுந்தரர் திருக்கோலம் புகழ்பெற்றது. பஞ்சலோகத்தில் அமைந்துள்ள இம்மூர்த்தி வேறெந்த முருகன் கோயில்களிலும் இல்லாத ஒன்றாகும். மணக்கோலத்தில் உள்ள வள்ளிநாயகியின் நாணமும், நளினமும் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும். மூலஸ்தான முருகப்பெருமான் பிரம்ம சாஸ்தா வடிவில் காட்சி தருகிறார். முருகனின் அருட்கோலங்களில் பிரம்ம சாஸ்தா வடிவை வழிபாடு செய்வோர் அறிவும் ஞானமும் பெறுவர்.

இலஞ்சியம்: திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் அமைந்துள்ள தலம் இலஞ்சி. "இலஞ்சியன்' என்றால் "நீர்நிலையில் பிறந்தவன்' என்பது பொருள். முருகன் நீர்நிலையாகிய சரவணப்பொய்கையில் உதித்தவர் என்பதால் இத்தலத்தில் அருளும் முருகனுக்கு இப்பெயர். ""இலஞ்சியில் (நீர்நிலையில்) வந்த இலஞ்சியம் (சரவணபவன்)'' என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடுகிறார். இப்பெருமான் நீரினைப் போன்ற குளிர்ச்சித் தன்மையை கொண்டவன். ஜீவநதியாகிய தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலையடிவாரத்தில் அமைந்த தலம் என்பதால், அருணகிரியார் இவ்வாறு குறிப்பிட்டார். நீர்நிலையில் குழந்தையாய் பிறந்த இலஞ்சிக்குமரன் தன்னை வழிபடுபவர்களுக்கு குழந்தைச் செல்வத்தை அருளும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். இத்தலத்தை "குமார கோயில்' என்றும் அழைப்பர்.

அச்சம் போக்கும் ஆறுமுகன்: ""பக்தர்களின் மனதில் அஞ்சு முகம் (பயம்) தோன்றும் போது ஆறுதல் வழங்கி அருள் தருபவன் ஆறுமுகப்பெருமான். இவரை வழிபடுபவர்களுக்கு கிரகங்களால் துன்பம் நேராது. எமதர்மனும் கூட, முருக பக்தர்களை தீண்ட அஞ்சுவான். ""முருகா என்று சொல்வதே தவமாகும். இவ்வாறு சொல்பவர்கள் அழியாத செல்வம் பெறுவர். அவர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பர். ஒரு காலத்திலும் அவர்களுக்கு துன்பம் என்பதே இருக்காது, என சிதம்பர சுவாமிகள் குறிப்பிடுகிறார். , , என்னும் மெல்லின,இடையின,வல்லின, எழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உகரம் சேர வரும் பெயர் "முருகா" ஆகும். இதனாலேயே இவர் தமிழ்க்கடவுள் எனப்படுகிறார். நம்பிக்கையோடு "முருகா" என்னும் நாமத்தை உச்சரிக்கும் அடியார்களுக்கு அவன் ஓடிவந்து அருள் செய்வான்.

தைப்பூச சிறப்பு: உற்சவர் முத்துக்குமாரர் கொடிமரத்துடன் கூடிய சன்னதியில் இருக்கிறார். இவரது முகத்தில் தழும்புகள் அதிகம் இருக்கிறது. விசேஷ காலங்களில் இவருக்கு பிரதான பூஜை நடக்கிறது. வருடத்தில் 9 முறை மட்டுமே இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். செவ்வாய்க்கிழமைகளில் பன்னீர் அபிஷேகம் மட்டும் செய்யப்படுகிறது. தைப்பூசத்தை ஒட்டி இங்கு 18 நாள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. தை பவுர்ணமியன்று சுவாமி, தங்கத்தொட்டிலில் உலா செல்வார். முருகன்- தெய்வானை திருக்கல்யாணமும், வெள்ளை யானை வாகனத்தில் உலாவும் நடக்கும். வள்ளி கல்யாணம் நடக்கிறது.

மகாவிஷ்ணுவின் கண்களிலிலிருந்து தோன்றிய அமிருதவல்லி, சுந்தரவல்லி ஆகிய இருவரும் முருகனையே மணக்க வேண்டும் என்று தவமிருந்தனர். முருகன் அமிர்தவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியை பூமியிலும் பிறக்கும்படி பணித்தார். கிரியா சக்தியாகிய அமிர்தவல்லி இந்திரன் மகளாகப் பிறந்து அவனது யானையான ஐராவதத்தினால் வளர்க்கப்பட்டாள். இதனால் அவளுக்கு தேவயானை என்ற பெயர் ஏற்பட்டது.

முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அதன்படி முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துனபத்திலிருந்து விடுபட்டார்கள். இதனால் தனது நன்றியைச் செலுத்தும் விதமாக இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்று புராணங்கள் பேசுகின்றன.

தேவயானைக்கு ஷஷ்டி தேவி என்ற பெயரும் உண்டு. இவள் பிரும்மாவின் மானஸபுத்திரி. மாத்ருகா மண்டலத்தைச் சேர்ந்தவள். மூலப் பிருகிருதியான பரதேவதையின் சக்தியில் ஆறில் ஒரு பங்கு உள்ளவள். அதனால்தான் சஷ்டி தேவி எனப் பெயர் வந்தது. இவள் குழந்தையைக் காக்கும் தெய்வம்.

இச்சா சக்தியாகிய சுந்தரவல்லி வள்ளிமலைச் சாரலில் தவமிருந்தாள். பின்னர் ஒரு மானின் வயிற்றில் பிறந்து வள்ளிக் கிழங்குக் குழியில் கிடைக்கப் பெற்றதால் வள்ளி என்று பெயர் பெற்று வேடர்குலத் தலைவன் நம்பிராஜனால் வளர்க்கப்பட்டாள்.

இவர்கள் இருவரையும் முருகப் பெருமான் மணந்தார். செலவச் செழிப்பில் தோன்றிய தேவயானையையும், எளிய வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளியையும் மணந்து கொண்ட நிகழ்வு இறைவன் பக்குவமடையாத ஜீவனையும் சமமாகக் கருதி அருள் புரிகிறார் என்பதை உணர்த்துகிறது.

பீடமில்லாத முருகன்: சென்னை பாரீஸ் பகுதியில் இக்கோயில் உள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலுக்குச் சென்று விடலாம். திறக்கும் நேரம்: காலை 6- 12மணி, மாலை 4- 9 மணி.போன்: 044-25352192, 25350219, 9841063072. மூலஸ்தானத்தில் முருகனுக்கு கீழே பீடம் கிடையாது. தரையில் பாதங்களை ஊன்றியிருக்கிறார். முருகன் தானாக விரும்பி நின்ற இடமென்பதால் பீடம் அமைக்கப்படவில்லை. இவருக்கு நேரே வாசல் கிடையாது. ராஜகோபுரமும், பிரதான வாசலும் வடக்குப் பகுதியில் உள்ளது. சுவாமிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை இருவரும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். தினமும் காலையில் கோ பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் விநாயகர், தன் மனைவியர் சித்தி புத்தியுடன் காட்சி தருகிறார். தம்பதியர் குடும்ப ஒற்றுமைக்காக இவரை வழிபடுகிறார்கள். கோயில் வளாகத்தில் சரவணப் பொய்கை தீர்த்தம் இருக்கிறது. இதன் கரையில் விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் சுதை சிற்பங்களாகக் காட்சி தருகின்றனர். தோல் நோய், உடலில் கட்டி ஏற்பட்டவர்கள் இத்தீர்த்தத்தில் வெல்லம் கரைத்து வேண்டிக்கொள்கின்றனர்.

வேல் வேல் வெற்றி வேல்:

தைப்பூசத்திருநாளில் பல காவடிகள் மட்டுமல்லாமல் எங்கும் வேல் வேல் கோஷம் தான். "வெற்றி வேல் முருகனுக்கு" என்று ஒருவர் ஆவேசமாக முழங்க "அரோஹரா" என்று பகதகோடிகள் முழக்கமிடுவார்கள், இந்த வேலுக்கு என்ன முக்கியத்தவம்? முருகனுக்கு முன்னாலேயே வேல் வந்துவிடுகிறது அதுவும் சாதாரண வேல் இல்லை வெற்றிக்கொள்ளும் வேல்? இது ஏன்? தாரகாசுரன் எல்லா ரிஷிமுனிவர்களுக்கும் தொல்லைக்கொடுத்து வர அவனதுக் கொடுமைத்தாங்காது சிவபார்வதியிடம் அவர்கள் முறையிட்டனர். சிவனும் பார்வதியும் மகன் முருகனை அழைத்து தாரகாசுரனை வதம் செய்ய அனுப்பினர், அதற்கு சிவபெருமான் பதினொன்று ஆயுதங்கள் கொடுத்தார், தாயின் ஸ்தானத்தில் பார்வதி முருகனுக்கு ஒரு வேல் கொடுத்தாள், அந்த வேலை எப்போதும் தன்னிடமே வைத்துக்கொண்டார் முருகன். சக்தி கொடுத்த வேல் கொண்டு தாரகாசுரனையும் வீழ்த்தினார். இதனால் அவரது பெயரும் சக்திவேல், வேலாயுதம், வேல்முருகன், வேலன், வேலப்பன், ஞானவேல், வீரவேல், செவ்வேல், என்றெல்லாமானது. அந்த முருகனைவிட வேலுக்கு சக்தி அதிகம் ஆனது. திருபரங்குன்றத்தில் வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற பூஜைகள் எல்லாவற்றையும் செய்கிறார்கள். இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

புராணக் கதை: ஒருசமயம் பரமேஸ்வரன் பார்வதியின் காதில் ஒரு மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார். அந்தச்சமயம் முருகன் ஒளிந்து அதைக் கேட்டதைப் பார்த்த சக்தி, முருகன் தம்மகனாக இருந்தாலும் தவறுக்கு தண்டனை உண்டு என்பதைச் சுட்டிக்காட்டிச் சாபம் கொடுத்தாள். அந்தச்சாபம் தீர முருகன் திருப்பரங்குன்றத்தில் கடும் தவம் செய்தார். சிவபார்வதி தவத்தினால் மகிழ்ந்து அந்தச்சாபத்தை நீக்கினர், இச்சாபவிமோசனம் நடந்தது தைப்பூசத்தில்தான்.

இந்தத்தைப்பூசத்தில் விஷ்ணுவும் இருக்கிறார். ஒரு சமயம் காவேரி நதி கங்கையைப் பார்த்து பொறாமை அடைந்தது. கங்கைக்கு எப்போதும் சிவனது முடியில் இருக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது தவிர கங்கை நதியில் குளித்தால் பாபங்கள் விலகிவிடுகின்றன. ஆகையால் கங்கைக்கு மிக முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என்று காவேரி மனத்தாங்கல் கொண்டாள். ஆகையால் மஹாவிஷ்ணுவிடம் பிராத்தனை செய்தாள். அவரும் தோன்றினார் மஹாவிஷ்ணு காவேரிமுன் தோன்றிய நாள் தைப்பூசத்தன்றுதானாம்.

ஆறு படை வீடு / அறுபடைவீடு:
பால சுப்பிரமணிய சுவாமி கோவில் - திருச்செந்தூர்
தண்டாயுதபாணி கோவில் - பழனி
சுப்பிரமணிய சுவாமி கோவில் - திருத்தணி
சுவாமிநாதசுவாமி கோவில் - சுவாமிமலை
சுப்பிரமணிய சுவாமி கோவில் - திருபரங்குன்றம்
சுப்பிரமணிய சுவாமி கோவில் - பழமுதிர்சோலை

அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை
கந்தகோட்டம்: வள்ளலார் தன் இளம்வயதில் வழிபட்ட தலம் சென்னை கந்தகோட்டம். இங்கு கந்தசுவாமி அருளுகிறார்.

தலவரலாறு: செங்கல்பட்டு அருகிலுள்ள திருப்போரூரை அன்னியர்கள் ஆண்டபோது, அங்கிருந்த பல கோயில்கள் சேதப்படுத்தப் பட்டன. பாதுகாப்பு கருதி அவ்வூர் கோயிலில் இருந்த கந்தசுவாமியை, பக்தர்கள் புற்றுக்குள் மறைத்து வைத்தனர். பல்லாண்டுகளுக்குப் பிறகு, கோயிலில் மீண்டும் வழிபாடு துவங்கியது. ஆனால், புற்றுக்குள் வைக்கப்பட்ட முருகன் சிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர். தற்போதைய கந்தகோட்டம் பகுதியில் வசித்த பக்தர்கள் இருவர், கிருத்திகை நாட்களில் திருப்போரூர் சென்று சுவாமியை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் அவர்கள் திருப்போரூர் சென்று திரும்பியபோது ஓய்வுக்காக ஒரு மரத்தடியில் தங்கினர். அப்போது, ஒரு பக்தரின் கனவில் தோன்றிய முருகன், அருகில் இருந்த புற்றில், தான் சிலையாக இருப்பதை உணர்த்தினார். புற்றிலிருந்த சிலையை எடுத்த பக்தர்கள், ஊர் திரும்பினர். ஓரிடத்தில் சிலையைக் கீழே வைத்தனர். பின்னர் அங்கிருந்து அதை எடுக்க முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பினர். "கந்தசுவாமி' என்ற பெயரையே சூட்டினர். பெத்தநாயக்கன்பேட்டை என்றழைக்கப்பட்ட இத்தலம் முருகன் கோயில் அமைந்த பிறகு, "கந்தகோட்டம்' என மாறியது.

வள்ளலார் தரிசனம்: கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்த ராமலிங்க அடிகளாரை, அவரது அண்ணன் சபாபதி, தனது குருவான மகாவித்வான் சபாபதியிடம் கல்வி கற்க அனுப்பினார். ராமலிங்க சுவாமிக்கு பள்ளிக் கல்வியில் நாட்டமில்லை. அருள் கல்வியை கற்பதிலேயே ஈடுபாடு இருந்தது. தினமும் இக்கோயிலுக்கு வந்த ராமலிங்க சுவாமி, கந்தசுவாமியைப் பற்றி "தெய்வ மணிமாலை" என்ற 31 பாடல்கள் பாடினார். பிற்காலத்தில் இவரே "வள்ளலார்" என அழைக்கப் பட்டார். இந்தக் கோயிலில் வள்ளலாருக்கு சன்னதி இருக்கிறது. தைப்பூசத்தையொட்டி மாலையில் வள்ளலார் பவனி வருவார். மாத பூசம் நட்சத்திரங்களிலும் இவருக்கு சிறப்பு பூஜைகள் உண்டு. சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள் ஆகியோரும் இந்த முருகனை வழிபட்டுள்ளனர். இவர்களுக்கும் சன்னதி இருக்கிறது.

வடலூரில், அருள் பெறும் ஜோதி வள்ளல் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலது புறம் பொற்சபையும், இடது புறம் சிற்சபையும் உள்ளன. இவைகளுக்கு மத்தியில் பஞ்சபூத தத்துவங்களை குறிக்கும் 5 படிகளை கடந்து உள்ளே சென்றால் சதுரபீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் காணப்படும். அதன் முன் 6. 9 அடி உயரம், 4. 2 அடி அகலம் கொண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. கண்ணாடிக்கு முன்னால் கருப்பு, செம்மை என பல வண்ணங்களில் ஏழு திரைகள் காணப்படும். இந்த திரைகளை நீக்கி, நிலைக்கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் இவை அனைத்தும் சித்தத்தத்துவங்களின் செயல்முறை உருவகம். இதை காணும் போது தத்துவமும், அதன் மெய் பொருளும் சாதகர்க்கு விளக்கமாக தெரிய வேண்டும் என மெய் பொருளை ஒரு ஓரங்க நாடகம் போல் வள்ளல் பெருமானார் ஆணைப்படி நடத்தி வைக்கும் நாள்.

இப்பூமியில் சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதமாகும். தை மாதத்தில் பூசம் நட்சத்திர நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும். தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள். மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது. இம்மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வருகிறது. இந்த தைப்பூச தினத்தை அருட்பெருஞ்சோதி சித்திக்குரிய தினமாக திருஅருட்பிரகாச வள்ளலாரால் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப் படும். அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி சந்திரன் என்பது மன அறிவு, சூரியன் என்பது ஜீவ அறிவு, அக்னி என்பது ஆன்மா அறிவு. சந்திரன் சூரியனில் அடங்கி சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தை பூசம். மனம் ஜீவனில் அடங்கி ஜீவன் ஆன்மாவில் அடங்கி ஆன்மா சிவத்துடன் கலந்து விடும் என்பதை காட்டவே தை பூசம் என்று பெருமைமிகு வள்ளலார் அவர்கள் உணர்த்தியுள்ளார்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

இத்தனை சிறப்புமிக்க இந்த நாளை சும்மாவாவது தங்கள் சௌகரியத்துக்காக நமது மூதாதையர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இது ஒன்றும் செய்து பரிசோதிக்கும் மேற்கத்திய பாணி இல்லை, செய்யும் முன்னே தீர்க்கமாக இந்நாள் என தீர்மானித்த நாள். இதில் நமது ஆயிரம் ஆயிரம் ஆண்டு அனுபவ அறிவு மட்டும் அனுபூதியில் பெற்ற மெய்யறிவும் சேர்ந்து, விண்மீன்கள் சேர்க்கை முதலியன ஆய்ந்து, மிகப் பெரும் வானசாஸ்திர அறிவுடன், தை பூச தினம், ஒரு விசேஷ தினம் அன்று இறைவழிபாடு செய்தல், மிக உகந்தது எனக் கண்டனர். இதற்காக சில விழாக்களையும், ஆலயங்களில் அமைத்தனர். எனவே இன்று இந்த நாளை மிகச் சிறந்த காரியங்களை தொடங்கவும், இறையுணர்வில் ஆழ்ந்து இருக்கவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நினைவுறுத்த விரும்புகிறேன். இந்த தை பூசம் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல தமிழர் வாழும் அத்தனை நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது. இத்தகைய நாளிலே நாமும் சிறந்த செயல்களை செய்து பயன் பெறுவோம். நம் ஒவ்வொருவர் வாழ்வும் சிறக்க இறையை வேண்டுவோம் !

1 comment:

  1. pl. visit to
    www.natarajadeekshidhar.blogspot.com
    Thanks for using my article on your blog.
    with thanks
    n.d. nataraja deekshidhar
    94434 79572

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.